பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், மலேசியத் தொழிற்சங்கங்களை வலுப்படுத்துவதற்காக 2026 தொழிற்சங்க விவகாரங்கள் திட்ட மானியமான PHEKS மூலம் 3.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிமிக்க, நேர்மையான மற்றும் ஆற்றல்மிக்க தொழிற்சங்கங்களை உருவாக்குதல் என்ற கருப்பொருளில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தொழிற்சங்க மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய ரமணன் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அதிகரித்து வரும் செயற்கைத் தொழிநுட்பங்கள் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் வேலை இழப்புகள் ஏற்படும் என அச்சம் நிலவி வரும் நிலையில், செயற்கை தொழில்நுட்பங்களை கற்று அறிந்து நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதே அதற்கான தீர்வாக இருக்கும் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த நிதியானது, தொழிற்சங்கங்களின் டிஜிட்டல் திறன், கல்வி, நிர்வாகம் மற்றும் அமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவற்றை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என அவர் கூறினார்.
மேலும், வேலைவாய்ப்புத் துறையில் ஏற்படும் மாற்றங்கள் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்களுக்குத் தேவையான திறன்களை மட்டுமின்றி, தொழிலாளர்களை எவ்வாறு பாதுகாப்பது, பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் எதிர்கால தொழில்சந்தைக்கு தயார்படுத்துவது என்பதையும் மாற்றும் என்றும் ரமணன் தெரிவித்தார்.
அதேவேளையில் தொழிற்சங்கங்களின் வலிமை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் மட்டுமல்லாமல், அதன் தலைமைத்துவத்தின் மீது தொழிலாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும் அளவிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடன் நெருக்கமாக இருந்து, பணியிடங்களில் நிலவும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அவற்றை நம்பகத்தன்மையுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நடவடிக்கையானது தொழிலாளர்களின் நலன், நிறுவனங்களின் நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒருங்கிணைந்து முன்னேறுவதற்காக முத்தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் ரமணன் தெரிவித்தார்.








