முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான விவகாரம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கூட்டரசுப் பிரதேச பொதுமன்னிப்பு வாரியமான எஃப்டிபிபி (FTPB) நாளை காலை 8.30 மணிக்கு கூடவுள்ளதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹான்னா இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.
பொது மன்னிப்பு வாரியத்தில் ஒருவராக இடம் பெற்றுள்ள ஹான்னா இயோ, கூட்டம் தொடர்பாக இதற்கு மேல் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில், நஜிப்பின் மனுவும் நாளைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கூட்டத்தில் உடனடியாக முடிவு எடுக்கப்படுமா அல்லது விவகாரம் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை.
மேலும், நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்படலாம் என்றும் மற்றொரு தகவல் கூறுகின்றன. ஆனால் இந்த வாய்ப்பு நாளைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படுமா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
72 வயதான நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷன்ல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பின்னர் அவரது சிறைத்தண்டனை 6 ஆண்டுகளாகவும், அபராதத் தொகையானது 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி, குறைக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும் என்ற நஜிப்பின் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி எலிஸ் லோக் தள்ளுபடி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








