ஷா ஆலாம், டிசம்பர்.22-
மனிதக் கடத்தலுக்கு ஆளானதாக நம்பப்படும் இரு இந்தோனேசியப் பெண்களை, ஷா ஆலம் மாவட்ட போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணியளவில், ஷா ஆலமில் உள்ள காயாங்காம் ஹைட்ஸ் என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இரு பெண்கள் மீட்கப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்சேய் எம்போல் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வீட்டில் பணியாற்றி வருவதாகவும், மற்றொருவர் கடந்த ஒரு மாதமாகப் பணியாற்றி வருவதாகவும் ரம்சேய் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரு பணிப் பெண்களின் செல்போன்களும், கடப்பிதழ்களும் முதலாளியால் முடக்கி வைக்கப்பட்டிருந்ததோடு, ஊதியம் ஏதுமின்றி கூடுதல் நேர வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 50 வயது பெண்ணும், அவரது 30 வயது மகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும் ரம்சேய் எம்போல் தெரிவித்துள்ளார்.








