Nov 5, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தை மூடும்படி பரிந்துரைத்துள்ள ஷாஹிடான் காசீமிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படும்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தை மூடும்படி பரிந்துரைத்துள்ள ஷாஹிடான் காசீமிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

மலேசிய நாடாளுமன்றத்தை மூடும்படி இன்று மக்களவையில் பரிந்துரைத்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் ஆராவ் எம்.பி. ஷாஹிடான் காசீமிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் அறிவித்துள்ளார்.

ஷாஹிடான் காசீமை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு நாளை வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ராயர் தெரிவித்துள்ளார்.

ராயர், இத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு மக்களவை துணை சபா நாயகர் ஏலிஸ் லாவ் அனுமதி அளித்தார்.

மக்களவையில் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான விநியோகச் சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது, மலேசிய நாடாளுமன்றம் சுதந்திரமாகவும், நம்பகத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும், அது தொடர்ந்து செயல்படுவதைக் காட்டிலும் மூடப்பட வேண்டும் என்றும் ஷாஹிடான் காசீம் பரிந்துரை செய்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த ராயர், மக்களவைக் கூட்ட விதிமுறை 36 பிரிவை மேற்கோள் காட்டி ஆராவ் எம்.பி. ஷாஹிடான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஷாஹிடானின் இந்தக் குற்றச்சாட்டு, கடுமையான மற்றும் நாகரீகமாற்றது என்று ராயர் வர்ணித்தார்.

மாமன்னரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட உலகத் தரத்திலான உயரிய பரிபாலனமான மலேசிய நாடாளுமன்றத்தின் மாண்பை, தரம் தாழ்த்தும் வகையில் ஷாஹிடானின் பேச்சு அமைந்து இருப்பதால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற ராயர் பரிந்துரை செய்த போது, அவையில் சிறு அமளிதுமளி ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராயர், ஆராவ் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை வியாழக்கிழமை தீர்மானம் ஒன்றைத் தாம் கொண்டு வரப் போவதாகக் குறிப்பிட்டார்.

Related News