கிள்ளான், ஜனவரி.27-
நேற்று திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், வட கிள்ளான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற புரோட்டோன் வீரா காரை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரிடமிருந்து இரண்டு நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
போலீசார் காரை நிறுத்தச் சொல்லியும் கேட்காமல் அதிவேகமாகச் சென்ற அந்த நபர்கள், தங்களைப் பின்தொடர்ந்த போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது தீயணைப்பு கருவியை கொண்டு ஸ்ப்ரே செய்து ஆக்ரோஷமாகச் செயல்பட்டுள்ளனர் என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
போலீசார் MPV வாகனத்தில் துரத்தலில் ஈடுபட்ட போது அவர்களது கார் விபத்துக்குள்ளானது. காரில் இருந்த இரண்டு உள்ளூர் நபர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்தக் கார் தற்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று விஜயராவ் குறிப்பிட்டார்.
அரசு அதிகாரியின் பணியைத் தடுத்ததற்காக குற்றவியல் சட்டம், 186- ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.








