கோலாலம்பூர், ஜனவரி.27-
நகரப்புற பள்ளிகளில் நிலவும் மாணவர் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, குறிப்பாக பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இரு வேளை பள்ளி நேரங்கள் அமல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தின் போது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்விவரத்தை வெளியிட்டார்.
நகரங்களில் உள்ள பள்ளிகள் அதிக மாணவர் எண்ணிக்கையுடன் நெருக்கடியாக உள்ளன. அதே வேளை கிராமப்புற மற்றும் உட்புறப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிச் செய்ய, நெருக்கடி மிகுந்த பள்ளிகளில் பாலர் பள்ளி மற்றும் புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தற்காலிகமாக இரு வேளை வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஒரே வேளை பள்ளி என்பது இலட்சியமாக இருந்தாலும், தற்போதைய சூழலில் கல்வியின் தரத்தைப் பாதிக்காமல் இருக்க இந்த உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என்று பிரதமர் விளக்கினார்.








