ஜார்ஜ்டவுன், ஜனவரி.27-
பினாங்கு மாநிலம் மீதான கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமது சனுசி முகமது நோரின் உரிமை கோரல்கள் அடிப்படை அற்றவை என்றும், அவை கூட்டரசு அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும் பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் மாமன்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பத்து காவான் எம்.பி.யான சாவ் கோன் இயாவ், 1957-இல் நாடு சுதந்திரம் பெற்றது முதலே பினாங்கு ஓர் இறையாண்மை கொண்ட மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின் மூலம் அதன் அந்தஸ்து மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. பினாங்கு மாநில அரசு இணையதளத்தில் இதற்கான வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று சாவ் கோன் இயாவ் சுட்டிக் காட்டினார்.
1985-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கெடா மற்றும் பினாங்கு எல்லை மாற்றம் மீதான சட்டத்தின் 325 ஆவது பிரிவின்படி இரு மாநிலங்களின் எல்லைகளும் சட்டப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளன.
மாநில எல்லைகளை அரசியல் அறிக்கைகள் மூலம் மாற்றிவிட முடியாது. இத்தகைய உரிமை கோரல்கள் நாட்டின் நிலைத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் சீர் குலைக்கும் என சாவ் கோன் இயாவ் எச்சரித்தார்.
சபாவின் மீதான சூலு சுல்தானின் உரிமை கோரலைப் போலவே, வரலாற்று ரீதியான காரணங்களைக் காட்டி தற்போதைய அரசியலமைப்பு இறையாண்மையை மாற்ற முடியாது என்று சாவ் கோன் இயாவ் தமது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








