கோலாலம்பூர், ஜனவரி.27-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இன்று செவ்வாய்க்கிழமை பெவிலியன் டாமான்சாரா ஹைட்ஸ் வணிக வளாகத்தில் காணப்பட்டார்.
தேசிய இருதய சிகிச்சைக்கழகமான ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வந்த பிறகு, அவர் பொதுவெளியில் மேற்கொண்ட முதல் பயணம் இதுவென அவரது உதவியாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்தார்.
இருப்பினும், டாக்டர் மகாதீர் இன்னும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றும், இது ஒரு சிறிய 'காபி பிரேக்' இடைவேளை மட்டுமே என்றும் அவர் கூறினார். சுஃபி பகிர்ந்துள்ள புகைப்படத்தில், 100 வயதான மூத்த அரசியல்வாதியான மகாதீர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, அதிகாரிகள் உதவியுடன் ஓர் உணவகத்தில் இருப்பதைக் காண முடிகிறது.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி, தனது இல்லத்தில் தவறி விழுந்ததில் மகாதீருக்கு வலது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் ஐஜேஎன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாத பிசியோதெரபி சிகிச்சையைப் பெற்று வருகிறார்.








