கோலாலம்பூர், ஜனவரி.27-
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், மலேசியாவின் சதுப்பு நிலக் காடுகளானது, சுமார் 40 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமாக அழிக்கப்பட்டு விட்டதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டின் சதுப்பு நிலக் காடுகளானது, சுமார் 5 லட்சத்து 86 ஆயிரத்து 548 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, இது மலேசியாவின் மொத்த வனப்பரப்பில் சுமார் 3.26 சதவீதத்தைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட சுமார் 42 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவிலான இந்த குறிப்பிடத்தக்கக் குறைவானது, இயற்கை மற்றும் மனிதனால் தூண்டப்பட்ட காரணிகளின் கலவையால் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு, மீன் வளர்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட காரணங்களுக்காக மனிதர்களால் இந்த சதுப்பு நிலக்காடுகளானது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்டுள்ள சேத நிலவரம் குறித்து அந்தந்த மாநில அதிகாரிகளிடம் விரிவான நிலப்பயன்பாட்டுத் தரவுகள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








