கோலாலம்பூர், ஜனவரி.27-
இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று மலேசியர்கள், மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில், இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மலேசியாவில் கொலை மற்றும் தீவைப்பு சம்பவ வழக்குகளுக்காகத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அந்த மூவரும், மலேசியாவில் இருந்து மும்பை வழியாக இங்கிலாந்தின் மான்செஸ்டருக்குத் தப்பி ஓடினர்.
ஆனால் இங்கிலாந்து குடிநுழைவு அதிகாரிகள் அவர்கள் மூவரையும் மான்செஸ்டருக்குள் அனுமதிக்க மறுத்ததால் மீண்டும் மும்பைக்கே நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் மூவரையும் மலேசியாவிற்கு அழைத்து வர சிறப்புப் போலீஸ் படை ஒன்று மும்பைக்கு விரைந்துள்ளது.








