கோலாலம்பூர், ஜனவரி.26-
மலேசியாவில் தங்கத்தின் விலை வரும் காலங்களில் ஒரு கிராம் 700 ரிங்கிட் என்ற அளவைத் தாண்டி முன்னேற வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வலுவடைந்து வரும் ரிங்கிட் மதிப்பு மற்றும் பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இது குறித்து SPI Asset Management நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் Stephen Innes கூறுகையில், "உள்ளூர் தங்க விலையின் உயர்வு என்பது உலகளாவிய நிதி அழுத்தங்கள் மற்றும் நாணய மாற்றங்களின் பிரதிபலிப்பாகும். அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, மலேசிய ரிங்கிட் வலுவடைந்து வரும் வேளையில் தங்கத்தின் விலையும் உயர் மட்டத்தில் நீடித்தால், அதன் விலை கிராம் ஒன்றுக்கு 700 ரிங்கிட் என்ற நிலையை நோக்கி நகரக்கூடும்," என்றார்.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 627 ரிங்கிட் 39 சென்னாக இருந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரமான 612 ரிங்கிட் 30 சென்னுடன் ஒப்பிடுகையில் 15 ரிங்கிட் 09 சென் உயர்வாகும்.
சர்வதேச அரசியல் சூழல்களைக் காட்டிலும், உலகளாவிய பொருளாதாரக் காரணிகளே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய உந்துதலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.








