காஜாங், ஜனவரி.26-
காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் கூறுகையில், காலை 9 மணியளவில் சில்க் நெடுஞ்சாலையின் 25.3 கிலோமீட்டர் பாதையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார்.
வலதுபுறப் பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்துள்ளார். அப்போது அருகில் வந்த டிரெய்லர் லாரியின் அடியில் அவர் சிக்கிக் கொண்டார்.
லாரியை ஓட்டி வந்த 53 வயதுடைய உள்ளூர் நபர், எதிர்பாராத விதமாக விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கண்டு லாரியை நிறுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை.
47 வயதான அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், உடல் உறுப்புகள் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக நாஸ்ரோன் குறிப்பிட்டார்.








