கோலாலம்பூர், ஜனவரி.27-
மும்பை விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்ட மூன்று முக்கிய மலேசியக் குற்றவாளிகளான நவீந்திரன் ராஜ் குமரேசன், ஸ்ரீதரன் சுப்ரமணியம் மற்றும் பிரதீப் குமார் செல்வராஜ் ஆகியோரின் பயங்கரமான குற்றப் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் சாதாரணக் குற்றவாளிகள் அல்ல என்றும், மலேசிய போலீஸ் துறையால் Op Jack Sparrow நடவடிக்கையின் கீழ் குறிவைக்கப்பட்ட ஒரு மாபெரும் குற்றக் கும்பலின் முக்கிய உறுப்பினர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த மூவரும் நேரடியாகத் தொடர்புடைய மிக முக்கியச் சம்பவம், கடந்த 2025 மார்ச் மாதம் கிள்ளான், தாமான் செந்தோசாவில் நிகழ்ந்த இரட்டைக் கொலை. பட்டப்பகலில், முகமூடி அணிந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்திய கொடூரத் தாக்குதல், சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட கும்பல் தேடப்படுவது குறித்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
இவர்கள் சார்ந்த கிரிமினல் கும்பல், 2023-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேராக் உள்ளிட்ட பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்தக் கும்பல் மீது கொலை, தீவைப்பு, ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
மும்பையில் தற்போது பிடிபட்டுள்ள இந்த மூவரையும் மலேசியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்டரீதியான மற்றும் அரசதந்திர நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புக்கிட் அமான் தலைமையகத்தின் உயரதிகாரிகள் குழு, இவர்களை விரைவில் மலேசியாவுக்கு அழைத்து வர மும்பை செல்லவுள்ளது. இந்த மூவரின் கைது, மலேசியாவின் பல முக்கியக் குற்ற வழக்குகளுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூவரும் இங்கிலாந்திற்குள் நுழைய மறுக்கப்பட்டதால், அனைத்துலக விதிகளின்படி அவர்கள் கடைசியாகப் பயணித்த இடமான மும்பைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அங்கு பிடிபட்டால் மலேசியாவிற்குத் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில், தப்பிக்கும் முயற்சியாகப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர் என்று பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.








