கோலாலம்பூர், ஜனவரி.21-
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியார் ரேய்மண்ட் கோ கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என அவரது மனைவி சுசானா லியூ (Susanna Liew), சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தாரிடம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் சிறப்புப் பிரிவு துணை இயக்குநர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மீது குற்றச் சதி, ஆதாரங்களை மறைத்தல் அல்லது புனைதல், தவறான தகவல் அளித்தல், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல், சட்டவிரோதமாகச் சிறை வைத்தல் மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து "முழுமையான ஆதாரங்களை" வழங்கக்கூடிய இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க ஒரு சிறப்புப் பணிக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகாம் ஏற்கனவே நடத்திய விசாரணையில், பாதிரியார் ரேய்மண்ட் கோ, புக்கிட் அமான் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 'அரசு ஏஜெண்டுகளால்' கடத்தப்பட்டார் என்பதற்கான சான்றுகள் இருப்பதாகக் கண்டறிந்ததை சுசானா தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
"பொது நலன் மற்றும் நீதியின் பாதுகாவலர் என்ற முறையில், சட்டத்துறை தலைவர் இதற்கு விரைவில் பதிலளிப்பார் என நம்புகிறேன்" என்று சுசானா லியூ தெரிவித்துள்ளார்.








