பாங்கி, ஜனவரி.13-
கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள குவா சாவான் வரலாற்றுச் சிறப்புமிக்க குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு, மலேசிய தேசிய பல்கலைக்கழகமான யுகேஎம்மின் மருத்துவப் புலத்தில் அமைந்துள்ள உடற்கூறியல் மற்றும் நோயியல் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1972-இல் யுகேஎம்மின் இந்த மருத்துவப் புலம் நிறுவப்பட்ட பிறகு, இத்தகைய ஒரு வரலாற்றுப் படிமம் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த எலும்புக்கூடு சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான Mesolithic காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், UKM-இன் மலாய் உலகம் மற்றும் நாகரிக நிறுவனத்தைச் சேர்ந்த தொல்பொருள்
ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் ஸூலிகண்டார் ரம்லி தலைமையிலான குழுவினர் இதனைத் தோண்டி எடுத்தனர்.
இது ஒரு வளர் இளம் பெண்ணின் எலும்புக்கூடு என அடையாளம் காணப்பட்டுள்ளது. புதைக்கப்பட்ட போது அதன் தலைப் பகுதியில் சுண்ணாம்புக் கல்லும், காலடியில் அரைக்கும் கல்லும் வைக்கப்பட்டிருந்தன.
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் மற்றும் எலும்பு அடர்த்தி ஆகியவற்றை ஆய்வு செய்ய யுகேஎம் மருத்துவப் புலம் திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் தொல்பொருள் வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.








