புத்ராஜெயா, ஆகஸ்ட்.29-
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகடி வதை மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு அமைச்சகங்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இன்று கூறுகையில், “இக்குழுவின் முக்கியப் பணிகளில், விடுதி விதிமுறைகளைப் பரிசீலித்தல் மற்றும் பகடி வதைக்கு எதிரான தீர்ப்பாயம் அமைக்கும் வாய்ப்பை ஆராய்வது போன்றவை அடங்கும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இச்சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
கடந்த மாதம் சபா, பாப்பாரில் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரீனா மஹாதீரின் மரணத்திற்குப் பிறகு, பள்ளிகளில் நடக்கும் பகடி வதையைக் கட்டுப்படுத்த இச்சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








