Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை – மகள் கைது
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை – மகள் கைது

Share:

ஈப்போ, மெங்லெம்புவில் 70 வயது மூதாட்டி ஒருவர் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவத்தில், மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கூறப்படும் அவரது 49 வயது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாலுவான் கிளெடாங் உத்தாரா 6, தாமான் வாங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

இரவு 7.41 மணியளவில் சந்தேக நபரின் கணவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் கைது செய்யப்பட்டதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பவத்துக்கு முன்பு மூதாட்டி, பத்துகாஜா பூசிங் முதியோர் பராமரிப்பு இல்லத்திலிருந்து மகள் மற்றும் மருமகன் பராமரிப்பில் இருப்பதற்காக அழைத்து வரப்பட்டதாகவும் முஹமட் அல்வி தெரிவித்தார்.

சந்தேக நபர் அக்டோபர் 4ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

Related News