புத்ராஜெயா, செப்டம்பர்.17-
சரவாக் சூரிய மின்சக்தி திட்டத்தில் தொடர்புடைய தன் மீதான 1.25 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டில், உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதி அஹ்மாட் ஸைடி இப்ராஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, ரோஸ்மாவின் விண்ணப்பத்தைத் தகுதியற்றதாகக் கூறி ஏகமனதாக நிராகரித்தது.
இதனையடுத்து, இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முடிவைத் தாங்கள் நிலை நிறுத்துவதாகவும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி, ரோஸ்மா மீதான ஊழல் குற்றச்சாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஸைனி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








