செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறைக்கான எதிர்காலத் திறன் கட்டமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கான இந்தக் கட்டமைப்பு, தொழில்துறைக்குத் தேவையான புதிய திறன்கள், தகுதிகள் மற்றும் வேலை வாய்ப்புப் பாதைகளை அடையாளம் காண்பதுடன், கல்வி மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று அங்காசபூரியில் நடைபெற்ற தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறைக்கான எதிர்காலத் திறன் கட்டமைப்பு மற்றும் திறமையாளர் மேம்பாட்டுத் திட்டத்தை உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டிராஜா டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் மற்றும் மனித வள துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் ஆகியோருடன் இணைந்து தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் இதனைத் தெரிவித்தார்.

ஏஐ காரணமாக விளம்பரம், வரைகலை வடிவமைப்பு உள்ளிட்ட சில துறைகளில் பணிகள் வேகப்படுத்தப்படுவதுடன், சில வேலைகளின் தன்மையும் மாறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், ஏஐ பல வேலைகளை முழுமையாக மாற்றிவிட முடியாது என்றும், தபால் மற்றும் கூரியர் துறையில் பொருட்களை விநியோகிப்பதை ஏஐயால் தற்போது மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார். அதேவேளை, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து சிறந்த பாதையைத் தேர்வு செய்வது போன்றவற்றில் ஏஐ உதவ முடியும் என்றார்.

தொலைத்தொடர்புத் துறையில் 5ஜிக்குப் பின்னர் 6ஜி வளரும்போது, ஏஐ அடிப்படையிலான புதிய வேலைகளும் உருவாகலாம் என்றும் ஃபாஹ்மி தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கான தனிச்சட்டத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி கூறினார்.








