எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க அம்மாநில பிகேஆர் கட்சி திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக புதிய முகங்களுக்கு வாக்காளர்களை சந்திப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கி, தேர்தலுக்கு சிறப்பாக தயார்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலாக்கா பிகேஆர் தலைமைத்துவ மன்றத்தின் செயல் தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் கூறுகையில், வேட்பாளர் தேர்வு பல கட்டங்களாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
முதலில் கிளை மற்றும் மாநில அளவில் பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் மத்திய தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, கட்சித் தலைவர் இறுதி முடிவு செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய தேர்தல்களில் பல்வேறு காரணங்களால் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அடாம் அட்லி, இம்முறை அதிகமான புதிய முகங்களை களமிறக்குவதுடன், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தில் சமநிலையை உறுதி செய்ய வேட்பாளர்களை முன்கூட்டியே தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.








