Aug 29, 2026
Thisaigal NewsYouTube
கட்டிக்க துணி கூட இல்லை… ஒண்ணுமே இல்லை!” – தீயில் அனைத்தையும் இழந்த குடும்பத்திற்கு எக்கான்சேவ் கரம்
தற்போதைய செய்திகள்

கட்டிக்க துணி கூட இல்லை… ஒண்ணுமே இல்லை!” – தீயில் அனைத்தையும் இழந்த குடும்பத்திற்கு எக்கான்சேவ் கரம்

Share:

தீ விபத்தில் தனது வீடும், பல ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த உடைமைகளும் ஒரு சில நிமிடங்களில் சாம்பலான நிலையில், 44 வயது பாலமுருகன் முனுசாமி, கூறிய இந்த வார்த்தைகள் நெஞ்சை நெருடுகின்றன.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி இரவு, சுங்கைப்பட்டாணி பண்டார் அமான் ஜெயாவில் உள்ள பாலமுருகன் வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. 90 விழுக்காடு சேதமடைந்த அந்த வீட்டுடன், ஒரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையும் சிதைந்து போனது.

42 வயது மனைவி கேத்திரினா அருள்தாஸ், மூன்று பிள்ளைகள், 69 வயதான தந்தை என ஆறு பேர் கொண்ட குடும்பம் தற்போது மாதம் RM600 வாடகை வீட்டில் தஞ்சமடைந்துள்ளது.

இச்சம்பவத்தில் அனைத்து பொருட்களும் தீயில் அழிந்து விட்டதாக பாலமுருகனின் துணைவியார் கேத்ரினா கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

சிந்தா சாயங் நிறுவனத்தில் பணியாற்றி மாதம் RM1,800 மட்டுமே வருமானம் பெறும் பாலமுருகனுக்கு, வாடகை, குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்வி என வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது பெரும் போராட்டமாகியுள்ளது.

இந்த நிலையில், அவர்களின் துயரத்தில் ஒரு சிறிய நம்பிக்கைக் கரம் நீண்டிருக்கிறது.

சுங்கைப்பட்டாணி பசார் ராயா எக்கான்சேவ் சார்பில், RM1,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் பாலமுருகன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மாநில எக்கான்சேவ் தலைமை நிர்வாகி ஜாம் ஜூரி மன்சூர் கூறுகையில், தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவுவது நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு என்றும், பாலமுருகன் எக்கான்சேவ் வாடிக்கையாளர் என்பதால் அவரது குடும்பத்தின் தேவையை அறிந்து இந்த உதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தீ அவர்களுடைய உடைமைகளை அழித்துவிட்டது… ஆனால், அவர்களின் நம்பிக்கையை அழிக்கவில்லை.

இன்னும் உதவிக்காக காத்திருக்கும் இந்தக் குடும்பத்திற்கு, நல்ல உள்ளங்களின் கரங்கள் நீளுமா?

Related News