நிபோங் திபால், ஜனவரி.25-
பினாங்கு, சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய Clemont Siluasegram என்ற விசாரணைக் கைதி, கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 3.45 மணியளவில் தப்பியோடினார். வீடு புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகிய வழக்குகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், வலிப்பு நோய் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, நீலம் - வெள்ளை நிற மருத்துவமனை சீருடையுடன் தப்பியது தெரிய வந்துள்ளதாக பினாங்கு மாநிலக் காவற்படையின் துணைத் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
கைதி தப்பியதில் அரசு ஊழியர்களின் கவனக்குறைவு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், தப்பியோடிய கைதி மீதும் காவற்படையினர் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த நபர் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக செபராங் பிறை செலாத்தான் மாவட்டத் தலைமையகத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு டத்தோ முஹமட் அல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.








