ஜோகூர் மாநிலத்தின் லிங்க்டுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காகச் சாலையை மூடிய சம்பவம் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் டான் செங் லீ கூறுகையில், 26 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்த எட்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக நாளை திங்கட்கிழமை கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக் காவலுக்கு ஆஜர்படுத்தப்படுவர் என்றார்.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் முகநூலில் வைரலான காணொளியைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
செனாய் உத்தாரா டோல் பகுதியிலிருந்து ஜோகூர் பிரீமியம் அவுட்லெட் வரை, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று போட்டியிட்டு பந்தயத்தில் ஈடுபட்டது காணொளியில் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த மற்றவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கை தொடர்கிறது.








