பெர்லிஸ், புக்கிட் லாரியில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் இடிக்கப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி முதல் பல வெளியேற்ற நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக பெர்லிஸ் மாநில நகராண்மைக்கழகம் தெரிவித்துள்ளது.
அந்த நிலத்தைக் காலி செய்யுமாறு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், ஜூன் 10 மற்றும் 19-ஆம் தேதிகளிலும் மேலும் இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் அஃபெண்டி ராஜினி காந்த் கூறினார்.
எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் கோவில் கட்டிடம் இடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நிலம் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம், நகராண்மைக்கழகம் உள்ளிட்ட பல அரசு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமாக அரசு அல்லது ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டிடம் அமைப்பதைத் தடை செய்யும் தேசிய நிலச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை மத அல்லது இன உணர்வுகளைத் தூண்டும் பிரச்சினையாக மாற்றாமல், சட்டத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என பெர்லிஸ் முப்தி வலியுறுத்தியுள்ளார்.








