மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியை, கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அரசியல் கருவியாக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் உள்ளடக்கங்களை நீக்குவது அமைச்சரோ அல்லது எம்சிஎம்சியோ எடுக்கும் நேரடி முடிவு அல்ல என்றும், சம்பந்தப்பட்ட தளங்களே தங்களது சமூக ஊடக விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் விளக்கினார்.
சைபர் துன்புறுத்தல், தனிப்பட்ட அந்தரங்கப் படங்கள் வெளியிடப்படுதல், மோசடிகள் உள்ளிட்ட புகார்கள் எம்சிஎம்சிக்கு கிடைத்தால், அவை ஃபேஸ்புக், டிக்டொக் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தளங்களுக்கு அனுப்பப்படுவதாக அவர் கூறினார்.
அதேவேளை, இன, மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3ஆர் விவகாரங்களில் சமூக ஊடகத் தளங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வருவதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.








