Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நாடு முழுவதும் ஆலய நிர்வாகங்களை சந்திக்க மஹிமா திட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடு முழுவதும் ஆலய நிர்வாகங்களை சந்திக்க மஹிமா திட்டம்

கோலாலம்பூர், நவ. 15-


நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாகப் பொறுப்பாளர்களுடன் ஒரு நல்லிணக்க சந்திப்பை நடத்துவதற்கு மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை, திட்டம் கொண்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ என். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் முற்பகுதியில் நடைபெற்ற மஹிமா தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரான டத்தோ சிவகுமார், அன்றைய ஆண்டுக்கூட்டத்தில் தாம் அளித்திருந்த வாக்குறுதிக்கு ஏற்ப, நாட்டில் உள்ள ஆலயங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை கண்டறிவதற்கும், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராயவும், மஹிமா பொறுப்பாளர்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளப்போவதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

ஆலயப் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்துவது மூலம் ஒவ்வொரு ஆலயத்தின் நடப்பு பிரச்னையை தாய் அமைப்பு என்ற முறையில் மஹிமா நேரடியாக கண்டறிவதற்குரிய வாய்ப்பு இருப்பதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

நாடு தழுவிய நிலையில் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணத்தில் முதல் மாநிலமாக வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பகாங் மாநிலத்தில் சில ஆலயங்களின் நிர்வாகத்தினரை தமது தலைமையிலான மஹிமா பொறுப்பாளர்கள் சந்திக்கவிருப்பதாக டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.

வரும் நவம்பர் 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பெந்தோங், சாமாங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயப் பொறுப்பாளர்களையும், மாலை 7.00 மணிக்கு காராக், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயப் பொறுப்பாளர்களையும் தாங்கள் சந்திக்கவிருப்பதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

மறுநாள் நவம்பர் 24 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குவாந்தான் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயப் பொறுப்பாளர்களையும், பிற்பகல் 3 மணிக்கு மெந்தக்காப், தமிழ்ப்பள்ளியிலும் சந்திப்பு நடத்தப்படவிருப்பதாக டத்தோ சிவகுமார் விளக்கினார்.

ஆலய நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசுவது மூலமே ஒவ்வொரு ஆலயத்தின் உண்மையான நிலவரத்தை கண்டறிய முடியும் என்று டத்தோ சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →