Aug 3, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியை உயிரிழந்த சோகம்: கல்வி சமூகத்தின் மனநலனை வலுப்படுத்த கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஆசிரியை உயிரிழந்த சோகம்: கல்வி சமூகத்தின் மனநலனை வலுப்படுத்த கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை

Share:

சிலாங்கூர், உலு சிலாங்கூரிலுள்ள பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியை ஒருவர் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி பள்ளியின் ஆசிரியர் அறையில் தூக்கிலிட்டு, உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தினரின் மனநலப் பாதுகாப்பை உறுதி செய்யக் கல்வி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், இந்தச் சம்பவம் தனது இதயத்திற்கு வலியை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஒரு மனநல ஆர்வலராகவே தான் பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களின் மனநல மேம்பாட்டிற்காகத் தாராள மனதுடன் உதவிகள் செய்ய அரசு தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

"எனது அன்பான ஆசிரியர்களே... நீங்கள் யாரும் தனிமையில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கல்வி அமைச்சு எப்போதும் உங்களோடு இருக்கும். சுகாதார அமைச்சு, ஆலோசகர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆசிரியர்களின் மனநலனைப் பாதுகாக்க இன்னும் பல திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம்" என்று அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு சிறிய அன்பான விசாரிப்பு சக ஊழியருக்குப் பெரும் மனவலிமையைத் தரும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆசிரியை உயிரிழந்த விவகாரத்தில் தேவையற்ற ஊகங்களைப் பரப்புவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியப் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Related News