முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், லெபனானைச் சேர்ந்த நகை நிறுவனத்துக்கு சுமார் 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியிருந்தார். எனினும் அவரது நிபந்தனையற்ற தடை கோரிக்கையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நிபந்தனையற்ற தடையை வழங்குவதற்குப் போதுமான காரணங்களை ரோஸ்மா முன்வைக்கவில்லை என்று தெரிவித்ததுடன், 30 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவும் விதித்தது.
கடந்த ஜூன் 10-ஆம் தேதி, தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படும் 43 ஆடம்பர நகைகளைத் திருப்பித் தராததற்காக, குளோபல் ராயல்டி டிரேடிங் SAL நிறுவனத்துக்கு 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட் வழங்குமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ரோஸ்மாவுக்கு உத்தரவிட்டது.
முன்னதாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி வழங்கப்பட்ட நிபந்தனையுடனான தடையின்படி, அந்த முழுத் தொகையையும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து வைத்திருக்கும் கணக்கில் செலுத்த வேண்டும்.
இதனை எதிர்த்து நிபந்தனையற்ற தடையைக் கோரி ரோஸ்மா மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மேல்முறையீடு அடுத்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.








