அரசியலில் பதவியைத் தக்கவைப்பதைவிட, கொடுத்த வாக்குறுதியைக் காப்பதும் தனிப்பட்ட நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதுமே முக்கியம் என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் தனது அமைச்சர் பதவி விலகல் அமலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அந்தோணி லோக், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றினார்.
தனது தந்தை சிறுவயது முதல் ஒவ்வொரு வாக்குறுதியையும் காப்பாற்ற வேண்டும் என அறிவுறுத்தியதைத் தனது அரசியல் பயணத்திலும் கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து, கடல்சார் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஃபிலைசிஸ்வா (FLYsiswa) விமானப் பயணக் கட்டண உதவித் திட்டம், கிள்ளான் துறைமுகத்தின் அனைத்துலக வளர்ச்சி, கேடிஎம்பி ரயில் சேவையின் மேம்பாடு மற்றும் இசிஆர்எல், ஆர்டிஎஸ் திட்டங்களின் முன்னேற்றம் ஆகியவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.
தாம் ஆற்றிய சிறிய பங்களிப்புகள்கூட நாட்டின் எதிர்காலத்திற்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புவதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.








