கோலாலம்பூர், ஜனவரி.24-
மலேசியக் குழந்தைகள் 6 வயதில் தொடக்கப் பள்ளிக்குச் செல்வதை அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தற்காத்துப் பேசினார்.
இந்த நடவடிக்கை குழந்தைகளை வற்புறுத்துவதற்காக அல்ல, மாறாக மலேசியக் கல்வியை உலகத் தரத்திற்கு இணையாகக் கொண்டு செல்வதற்காகவே எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியக் குழந்தைகள் 7 வயதை அடையும் வரை கல்வி ரீதியாக 'பலவீனமானவர்கள்' என்று கருதுவது சரியல்ல என்று இன்று 'செபராங் பிறையில் Aspire மையத்தை' திறந்து வைத்துப் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே 6 வயதுக் குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்க்கின்றன. இதில் நாம் ஏன் பின் தங்கியிருக்க வேண்டும்? ஆசியான் நாடுகளில் இந்தோனேசியாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தி விட்டன. எனவே, நாமும் இதை விரைவுபடுத்த வேண்டும்," என்றார்.
மேலும், தொடக்கப்பள்ளிக்குச் செல்ல இன்னும் முழுமையாகத் தயாராகாத குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் மூலம் அரசாங்கம் உதவும் என்றும், இது அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் அல்ல, விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், லாவோஸ், புருனை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே 6 வயதில் தொடக்கக் கல்வியைத் தொடங்குகின்றன என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.








