கோலாலம்பூர், ஜூலை.23-
இவ்வாண்டு மலேசிய தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி திங்கட்கிழமை கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டு இருப்பது தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
செப்டம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவிருக்கும் மலேசியத் தினத்தையொட்டி, வார விடுமுறையுடன் கூடுதல் ஒரு நாள் விடுமுஐ அறிவிக்கப்பட்டு இருப்பதால் பொதுச் சேவை ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் துறை ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர் என்று ஸ்டீவன் சிம் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கூடுதல் விடுமுறையின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் தேசிய உணர்வை மேலோங்கச் செய்வதுடன் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.








