பேரா, கம்பாரில் ஜப்பான் போலீஸ் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, ஜப்பானியர்களிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அழைப்பு மையத்தைப் போலீசார் முறியடித்து, 13 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒன்பது ஜப்பானியர்கள், அதில் இரு பெண்களும், நான்கு சீனர்களும் கைது செய்யப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
20 முதல் 57 வயதுக்குட்பட்ட அவர்கள், கம்பார், தாமான் பண்டார் பாரு, ஜாலான் காலேஜ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்று வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.
இக்கும்பலின் நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்கலாம் என்றும், ஜப்பானில் உள்ளவர்களை ஜப்பான் போலீஸ் அதிகாரிகள் எனக் கூறி ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர், இதேபோன்ற மோசடி நடவடிக்கைகளுக்காக மலேசியா வருவதற்கு முன்னர் கம்போடியாவில் பணியாற்றியதாகவும், மோசடி மூலம் கிடைத்த தொகையில் அவர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டதாகவும் முஹமட் அல்வி தெரிவித்தார்.
சோதனையில் இரண்டு மடிக்கணினிகள், 18 கைப்பேசிகள், இரண்டு iPadகள், இணைய ரௌட்டர், ஜப்பான் போலீஸ் சின்னம் கொண்ட மூன்று பதக்கங்கள் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று டத்தோ முஹமட் அல்வி குறிப்பிட்டார்.








