பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சரான ஹன்னா யோவ், தனது கணவர் எம். ராமச்சந்திரனை 18 ஆண்டுகளுக்குப் பின்னர் விவாகரத்து செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஹன்னா யோவின் செய்திப் பிரிவு செயலாளர் அஹ்மத் ஃபாஸ்லி முகமது யாடி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
விவாகரத்து தொடர்பான செய்தி உண்மைதான் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ஹன்னாவுக்கு தனிப்பட்ட இடைவெளி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தற்போதைக்கு இதுகுறித்து வேறு எந்த விளக்கமும் அளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
47 வயதான ஹன்னா யோவும், 46 வயதான ராமச்சந்திரனும் 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு ஷேய், 2013ஆம் ஆண்டு கேய்லி என இரு பிள்ளைகள் உள்ளனர்.
ஹன்னா யோவ், 2022 முதல் 2025ஆம் ஆண்டு வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்ததுடன், சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவி வகித்து வருகிறார்.








