Jun 30, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக  நடனப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கிள்ளான் தமிழ்ப்பள்ளி மாணவி யோஷ்ணா
தற்போதைய செய்திகள்

அனைத்துலக நடனப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கிள்ளான் தமிழ்ப்பள்ளி மாணவி யோஷ்ணா

Share:

கோலாலம்பூர், மார்ச்,22-

சீனாவின் செங்டு (Chengdu) நகரில் நடைபெற்ற 'The Dance of Asia 2026' எனும் அனைத்துலக நடனப் போட்டியில், கிள்ளான் ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவி யோஷ்ணா லோகேந்திரன் முதலாம் இடத்தைப் பிடித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நேற்று மார்ச் 21 நடைபெற்ற இப்போட்டியில், 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்றதோடு, ஒட்டு மொத்தப் பிரிவில் வெள்ளி விருதினையும் அவர் தட்டிச் சென்றார்.

5 வயது முதல் நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் யோஷ்ணா, முதல் முறையாகச் அனைத்துலக மேடையில் தடம் பதித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

தன் மகளின் உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள அவரது தாயார் மோகனேஸ்வரி, ஆசிய பசிபிக் நாடுகளின் திறமையாளர்களுக்கு மத்தியில் யோஷ்ணா ஜொலிப்பது தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றார்.

பணி நிமித்தமாக நேரில் செல்ல முடியாவிட்டாலும், தன் மகளின் வெற்றியைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக ஒரு போலீஸ் அதிகாரியான யோஷ்ணாவின் தந்தை ஏஎஸ்பி லோகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related News