Jun 30, 2026
Thisaigal NewsYouTube
அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்
தற்போதைய செய்திகள்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

Share:

நாட்டில் பல நினைவுப் பூங்காக்களை நிர்வகித்து வரும் பிரதான நிறுவனமான நிர்வாணா ஏசியா குழுமத்தின் பல நினைவுப்பூங்காக்களில் நிகழ்ந்துள்ள பிரேதங்களின் அஸ்தி கலசங்கள் திருட்டுச் சம்பவங்கள், கம்போடியாவைச் சேர்ந்த திட்டமிடப்பட்ட குற்றச் கும்பல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அந்த நிறுவனம் சந்தேகம் கொண்டுள்ளது.

இந்தத் திருட்டுகள் ஏதோ எதேச்சையாக நடந்தவை அல்ல, மாறாக, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட குற்றச்செயல்கள் என்பது நல்லடக்க சடங்குகளை நிர்வகித்து வரும் நிர்வாணா அதிரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே போன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஹாங்காங் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் நடந்துள்ளன. இது பிராந்திய அளவில் செயல்படும் கம்போடிய 'ஸ்கேம்' கும்பல்களின் வேலையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நெகிரி செம்பிலானில் நீலாயிலும், ஜோகூரில் கூலாயிலும் உள்ள நிர்வாணா நினைவுப் பூங்காக்களில் திருடப்பட்ட அனைத்து அஸ்தி கலசங்களும் போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட அஸ்தியை முறைப்படி உறுதிப்படுத்தி, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சட்ட ரீதியான ஆலோசனைகள் மற்றும் மனரீதியான ஆதரவை வழங்க நிர்வாணா நிறுவனம் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இறந்தவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்தும் வகையிலும், குடும்பத்தினரின் மன அமைதிக்காகவும், அவரவர் மத நம்பிக்கைகளின்படி சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் மதச் சடங்குகளுக்கு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இறந்தவர்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் இத்தகையச் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருடப்பட்ட அஸ்தியை மீண்டும் ஒப்படைக்க, இறந்தவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது அந்த நினைவுப் பூங்கா நிர்வாகத்திடமோ பெரும் தொகையைப் பிணைப்பணமாக கேட்டு மிரட்டுவதே இந்த கம்போடியா கும்பல்களின் நோக்கம் என்று நம்பப்படுகிறது.

Related News