பட்டர்வொர்த், டிசம்பர்.21-
மலேசியாவில் மீண்டும் பொருள் சேவை வரியான ஜிட்ஸ்டி வரி முறையைக் கொண்டு வருவதே தேசிய முன்னணியின் உறுதியான நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போதுள்ள விற்பனை சேவை வரி – எஸ்எஸ்டி வரி முறையை விட ஜிஎஸ்டி முறையே நாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும், மக்களுக்குப் பலன்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கவும் உகந்த சிறந்த வழி என்று அவர் வாதாடியுள்ளார்.
16-வது பொதுத்தேர்தல் வரை இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அதுவரை தற்போதைய வரி முறைக்கு வாய்ப்பு வழங்கினாலும், தேர்தல் வெற்றிக்குப் பின் ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டு வர தேசிய முன்னணி அழுத்தம் கொடுக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். "எஸ்எஸ்டி வரி முறையினால் மக்கள் சிரமப்படுகிறார்கள், எனவே பழைய ஜிஎஸ்டி முறையையேக் கொண்டு வாருங்கள்" என்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார். கடந்த 2018-ல் நீக்கப்பட்ட இந்த வரி முறையை மீண்டும் கொண்டு வருவதாக மூலம், நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தி மக்களுக்குக் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.








