புத்ராஜெயா, ஆகஸ்ட்.20-
அரச மலேசிய போலீஸ் படையின் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநரான டத்தோ குமார் முத்துவேல் நியமிக்கப்பட்டதைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தற்காத்துப் பேசினார்.
அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளை வகிக்கும் ஆற்றல் வாய்ந்த திறமையான நபர்களுக்கு இனம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இனம் எனக்கு ஒரு பிரச்னை அல்ல. ஆனால் அந்தப் பணியை ஏற்று வழிநடத்தக்கூடிய எவரும் அதற்குத் தகுதியானவரே என்று இன்று நிதி அமைச்சில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியின் தலைவராகப் பணியிடம் மாற்றப்பட்டுள்ள முன்னாள் சிஐடி இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஷுஹைலி ஸாயினுக்குப் பதிலாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி டத்தோ குமார், அரச மலேசியப் படையின் மிகப் பெரிய உயர் பதவியான சிஐடி இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்பு டத்தோ குமார், ஜோகூர் மாநில போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார்.
நாட்டின் முக்கியப் பதவிக்கு டத்தோ குமார் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெர்சத்து கட்சியின் முக்கிய த் தலைவர் பட்ருல் ஹிஷாம் ஷாஹரின் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதே போன்று மலேசிய ஆயுதப் படையில் லெப்டினன்ட் ஜெனரலாக சீனச் சமூகத்தைச் சேர்ந்த ஜோனி லிம் நியமிக்கப்பட்டது குறித்தும் பெர்சத்து கட்சியின் போர்ட்டிக்சன் தொகுதியைச் சேர்ந்த அந்தத் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பிற இனத்தவர்களுக்குத் தொடர்ந்து முக்கியப் பதவிகள் அளிக்கப்பட்டு வருமானால் மலேசியா விரைவில் பூமிபுத்ரா அல்லாத முதல் தலைமை நீதிபதி, ஆயுதப் படைத் தலைவர் மற்றும் போலீஸ் படைத் தலைவர் ஆகியோரைப் பெற முடியும் என்று அந்த பெர்சத்து தலைவர் அரசாங்கத்தை மறைமுகமாகச் சாடினார்.
எனினும் நாட்டில் உயர் பதவிகளில் உள்ள காவல் துறையினரில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் என்றும், காவல்துறைத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குநர்கள் உட்பட அனைவருமே மலாய்க்காரர்களாக இருப்பதை டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் தேசிய மொழி அழிக்கப்பட்டு வருவதாகவும், சீனச் சமூகம் அரசியல் ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த சமூகமாக மாறி வருகின்றது என்றும் இன உணர்வைத் தூண்டி வருகின்ற நபர்களை அன்வார் கடுமையாகச் சாடினார்.
நாட்டைக் காப்பாற்றுவதற்கும், வழி நடத்துவதற்கும் பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என இரு தரப்பிலும் சமத்துவம் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று பிரதமர் விளக்கினார்.








