கோலாலம்பூர், நவ. 12-
கடந்த 2021 ஆம் ஆண்டில் தனது தாயாரை கொன்று இருக்கலாம் என்று நம்பப்படும் ஓர் இந்திய ஆடவர், சடலத்தை கடந்த மூன்று ஆண்டு காலமாக தனது வீட்டில் உள்ள ஐஸ் பெட்டிக்குள் ரகசியமாக வைத்திருந்தது இன்று அம்பலமானது.
மனோ ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த இந்திய ஆடவர், தன்னை வருத்தி வருகின்ற நோய்க்கு மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் போலீஸ் துறையுடன் தொடர்பு கொண்டு, தமது தாயாரின் உடலை ஐஸ் பெட்டிக்குள் வைத்திருக்கும் விவரத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, தாமான் ஓ.யு.ஜி.யில் உள்ள 50 வயதுடைய அந்த நபரின் வீட்டிற்கு முதலுதவி சிகிச்சைப்பிரிவினருடன் விரைந்த போலீசார், ஐஸ் பெட்டிக்குள் மூதாட்டி ஒருவரின் சடலம், பிளாஸ்டிக் பையினால் சுற்றுப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
போலீசார் அந்த வீட்டை வந்தடைந்த போது, அந்த நபர், ஐஸ் பெட்டிக்கு அருகிலேயே நின்றவாறு காணப்பட்டுள்ளார்.
80 வயதுடைய தனது தாயாரை கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொன்றதாக அந்த இந்திய நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வீட்டை சோதனையிட்ட போலீசார், ஐஸ் பெட்டிக்குள் மூதாட்டியின் இறுகிய சடலத்தின் அருகில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் சில பொருட்களை கண்டு பிடித்ததுடன் அந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
அந்த நபர், தனது தாயாரை அடித்தே கொன்று இருப்பதாக தெரியவிந்துள்ளது. இக்கொலை குறித்து வெளியே தெரியாமல் இருக்க தனது தயாரின் உடலை பிளாஸ்டிக் பைகளினால் நன்கு சுற்றி, ஐஸ்பெட்டியை சற்று சாய்வாக வைத்து, கடந்த மூன்று ஆண்டு காலமாக பிணத்தை மறைத்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
அச்சடலத்தை மீட்ட போலீசார், சவப்பிரசோதனைக்காக பெட்டாலிங் ஜெயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா, இது தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவர் என்றார். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே மனோரீதியாக பாதிக்கப்பட்டவரா? இல்லையா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.








