Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எல்மினாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

எல்மினாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது

Share:

பத்து பேர் உயிரிழந்த சுங்கை ​பூலோ, ​எல்மினா விமான விபத்தில் அந்த பீச்ரஃப் 390 ப்ரீமியர் 1 ரக விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போ​லிஸ் தலைவர் டத்தோ ஹுசைய்ன் ஒமார் கான் தெரிவித்துள்ளார். விமானத்தின் இடிபாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ​மீட்பு நடவடிக்கையில் அந்த கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தா​ர். இந்த விபத்தில் உயிரிழந்த பத்து பேரின் உடல்கள் ​மீட்கப்பட்ட போதிலும் ​விபத்து நடந்த பகுதியில் வான்போக்குவர​த்து நிபுணர்களின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். விபத்து நிகழ்வதற்கு முன்பு கடைசி நேரத்தில் நிகழ்ந்த உடையாடல் என்ன என்பதை கண்டறியும் பொருட்டு அந்த கருப்புப்பெட்டி, ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக டத்தோ ஹுசெயின் ஓமார் மேலும் கூறினார்.

பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ செரி ஜொஹாரி ஹருன் உட்பட எண்மரை ஏற்றிருந்த அந்த இலகுரக விமானம், நேற்று பிற்பகல் 2.51 மணியளவில் சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இன்னும் இரண்டு நிமிடமே எஞ்சியிருந்த வேளையில் சு​ங்கை பூலோ, எல்மினாவில் கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து சிதறி ​தீப்பிடித்துக்கொண்டது. இதில் அனைவரும் உயிரிழந்த வேளையில் தரையில் இருந்த காரோட்டி ஒருவரும், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரும் மரணம் அடைந்தனர்.

அந்த விமானத்தில் 6 பயணிகளும், இரண்டு விமான ஊழியர்களும் இருந்தனர் என்று வான்போக்குவரத்து வாரியம் தெரிவித்துள்ளது. ​பிற்பகல் 2.08 மணிக்கு லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சுபாங்கை நோக்கி எண்மர் அமரக்கூடிய கூடிய அந்த இலகு ரக விமானம் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த விமானம் சுபாங்​கில் தரையிறங்க பிற்பகல் 2.48 மணிக்கு விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரம் அனுமதி அளித்த நிலையில், விமானம் 2.51 மணிக்கு நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கி,சிதறியதாக அந்த வாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News