ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நூலகத்தில் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அரபு மொழி ஆசிரியரை விடுவித்த செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை, முவார் உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ். கல்யாண குமார், 35 வயதான அஹ்னப் அஃபிக் ஷைருல் பஸ்ரி என்பவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், நான்கு பிரம்படிகளும் விதித்தார்.
மேலும், குற்றவாளி சிறையில் இருக்கும் காலத்தில் உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்றும், தண்டனை காலம் முடிந்த பிறகு அவர் போலீஸ் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபர் 3-ஆம் தேதி, காலை 10.20 மணி முதல் 11.20 மணி வரை, ஜோகூர் மாநிலத்தின் முவார் பகுதியில் உள்ள ஒரு பள்ளி நூலகத்தில், பாதிக்கப்பட்ட மாணவியை, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அஹ்னப் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அரசு தரப்பு சாட்சியாளர் ஒருவரின் சாட்சியத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கண்டறிந்த செஷன்ஸ் நீதிமன்றம், அஹ்னப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து விடுதலை செய்தது.








