மலேசிய தேசியப் பதிவுத் துறையான ஜேபிஎன், மக்கள் பிறந்தது முதல் இறப்பு வரை அவர்களின் வாழ்க்கை மற்றும் அடையாளப் பதிவுகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஜேபிஎன் தனது 78ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், 1869ஆம் ஆண்டிலேயே பினாங்கில் முதல் பிறப்புப் பதிவுகள் உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இன்று நாடு முழுவதும் உள்ள ஜேபிஎன்னிடம் கிட்டத்தட்ட 50 கோடி மக்கள்தொகை தொடர்பான பதிவுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
2022 முதல் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வரை 20 லட்சத்துக்கும் அதிகமான பிறப்புகளும், 9 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான தத்தெடுப்புப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் மைகாட் அடையாள அட்டையை வைத்திருப்பதாக சைஃபுடின் தெரிவித்தார்.
மக்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு வருவதற்காகக் காத்திருக்காமல், சேவைகள் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில், பின்தங்கிய பகுதிகள் மற்றும் சேவைகளைப் பெறுவதில் சிரமம் உள்ளவர்களுக்காக மெக்கார் திட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதேபோல், பள்ளி மாணவர்களின் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மேகார் டிடிக் திட்டத்தின் கீழ் அடையாள ஆவணங்கள் இல்லாததாக அடையாளம் காணப்பட்ட 12 ஆயிரத்து 101 மாணவர்களின் வழக்குகளும் தீர்க்கப்பட்டுள்ளதாக சைஃபுடின் தெரிவித்தார்.








