இந்நாட்டில் புதிய அரசியல் கட்சி ஒன்று தோற்றுவிக்கப்படுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆசி வழங்கியதாக கூறப்படுவதை பிரதமர் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.
புதிய அரசியல் கட்சி தோற்றுவிக்கப்படுவதற்கு பிரதமர் அன்வார் ஆதரவு வழங்கவில்லை, அதனை அங்கீகரிக்கவும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய கட்சியை அமைக்கும் விவகாரத்தில் பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தப்படுவதை பிரதமர் துறை கடுமையாக கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற செயல்கள், பிரதமர் அன்வார் மற்றும் அவரின் நிர்வாகத்தின் நம்பகத்தன்மைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் நினைவுறுத்தியுள்ளது.
பிரதமர் பெயரை பயன்படுத்தி எந்தவொரு தரப்பினரும் வெளியிடும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கையினால் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய சமுதாயத்தின் மத்தியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தோற்றுவிப்பது தொடர்பில் இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் என்று தொழில் அதிபர் ஓம்ஸ் தியாகராஜன் கூறியதாக மலேசியா கினி வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் பிரதமர் அலுவலகம் இந்த விளக்கத்தை தந்துள்ளது.








