Dec 4, 2025
Thisaigal NewsYouTube
6 வயது மகன் திஷாந்த்தைக் கொன்று, புதைத்ததாக தந்தை மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

6 வயது மகன் திஷாந்த்தைக் கொன்று, புதைத்ததாக தந்தை மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

ஜெலெபு, ஆகஸ்ட்.07-

தனது 6 வயது மகன் திஷாந்த்தைக் கொன்று, சடலத்தைப் புதைத்ததாக தந்தை ஒருவர், நெகிரி செம்பிலான், ஜெலெபு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

இ-ஹெய்லிங் வாகன ஓட்டுநரான 36 வயது எம். அருண்குமார் என்ற அந்த தந்தை, மாஜிஸ்திரேட் நோர்ஷஸ்வானி இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 23 ஆம் தேதி காலை 9 மணிக்கும், மதியம் 12.55 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நெகிரி செம்பிலான், பாஹாவ், ஜாலான் ரொம்பின் சாலையின் 25 ஆவது கிலோமீட்டரில் தனது ஒரே மகனான திஷாந்த்தைக் கொன்று, சடலத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் புதைத்ததாக அருண்குமார் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அருண்குமார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அருண்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவர் தலையை அசைத்தார்.

இக்கொலை வழக்கு, சிரம்பான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அருண்குமாரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட அருண்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது முகத்தில் எந்தவொரு சலனமின்றி காணப்பட்டார்.

ஜோகூர், தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் தனது மகன் திஷாந்த்தைக் காரில் தனியாக அமர செய்து விட்டு, உணவு வாங்குவதற்காக கடைக்குச் சென்ற போது தனது மகன் காணாமல் போனதாக இஸ்கந்தார் புத்ரி மாவட்ட போலீஸ் நிலையத்தில் கடந்த ஜுலை 24 ஆம் தேதி புகார் அளித்து நாடகமாடியதாகக் கூறப்படும் அருண்குமார், அன்றைய தினம் மாலையிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சிறுவன் திஷாந்த் காணாமல் போனது தொடர்பாக அவனது தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, குடும்பத் தகராறு காரணமாக அந்தச் சிறுவனைப் பராமரிக்கும் உரிமை மீதான பிரச்னை இருப்பதாக போலீசாருக்குத் தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போது, அந்தப் பச்சிளம் பாலகனை, 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹாவில் ஒரு புதரில் கொலை செய்து புதைத்து இருப்பதை ஒப்புக் கொண்டார்.

சிறுவனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, சவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, சிறுவனின் கழுத்து கேபல் டையினால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது சவப்பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Related News