கோலாலம்பூர், பிப்ரவரி.10-
தரவு சார்ந்த அரசாங்கத்தை உருவாக்கி பொதுச் சேவைத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரைவுபடுத்துவதற்காக, புதிய பொதுச் சேவைத் துறை தரவு டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்கத்திற்கு வலுவான தரவு மேலாண்மை அவசியம் என்பதால், இக்கொள்கை நீண்டகால டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இன்று கோலாலம்பூர், ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் நடைபெற்ற பொதுச் சேவைத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய தரவு கொள்கை அறிமுக நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனைத் தெரிவித்தார்.

தற்போதுள்ள சிதறிய தரவு அமைப்புகளை டிஜிட்டல் மயமாக்கி, மலேசிய அரசாங்க மத்திய தரவு பரிமாற்ற தளமான MyGDX மூலம் பாதுகாப்பான தரவு பகிர்வை உறுதிச் செய்வதே பொதுச் சேவைத் துறை தரவு டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். தரவு சார்ந்த முடிவுகள் மூலம் நிர்வாகத்தில் பண விரயம் குறைக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்படும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

தேசிய டிஜிட்டல் துறையின் கீழ் 81 முகமைகள் இணைந்துள்ள இந்தத் திட்டம், பொதுமக்களுக்கான டிஜிட்டல் சேவைகளை வேகமாகவும் நீதியாகவும் மாற்றும் ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று அமைச்சர் தெரிவித்தார்.
இது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறந்த நிர்வாக தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.








