ஜார்ஜ்டவுன், நவம்பர்.28-
எல்லைக் கடந்த குற்றச்செயல்கள் தொடர்புடைய போக்குவரத்துக்கு பினாங்கு மாநிலம் பிரதான டிரான்சிட் மையமாக விளங்குகிறது என்று மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா அருகில் பினாங்கு இருப்பதால், பூவியியல் அமைப்பு ரீதியாக எல்லை கடந்த குற்றச்செயல்களுக்கு கடத்தல்காரர்கள் பினாங்கை ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இடைக்காலத் துணை தலைமை இயக்குநர் லக்சமானா மூடா மாரிதிம் முகமட் ஸாவாவி அப்துல்லா தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றசெயல்களுக்கான முக்கியப் போக்குவரத்துக்கு பினாங்கு பயன்படுத்தப்படுகிறது. பினாங்கு தீவு வீற்றிருக்கும் இடத்தின் புவியியல் தூரம் மிக நெருக்கமாக இருப்பதாலும், பிராந்தியப் பாதைகளின் நடுவில், மலேசியா இருப்பதாலும் கடத்தல் கும்பல்கள், மற்ற நாடுகளுக்கு தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு அல்லது இடம் மாறுவதற்கு முன்பு பினாங்கில் நின்று விட்டு செல்லும் டிரான்சிட் மையமாக பயன்படுத்துகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா நீரிணை நீர் நிலைகள் மத்தியில் பினாங்கு தனித்து நிற்கும் ஒரு தீவாக விளங்குவதை வரைப்படத்தில் தெளிவாகக் காண முடியும் என்று ஜார்ஜ்டவுனில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் ஸாவாவி இதனைத் தெரிவித்தார்.








