Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள்: பிரதமர் அன்வார் சவால்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள்: பிரதமர் அன்வார் சவால்

Share:

புத்ராஜெயா, ஜூலை.21-

தம்மைப் பதவி விலகுமாறு நெருக்குதல் அளிக்கத் தொடங்கியுள்ள எதிர்க்கட்சியினர், திராணியும், நெஞ்சுரமும் இருந்தால் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும்படி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சவால் விடுத்துள்ளார்.

அதே வேளையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவது தொடர்பான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மையினர் எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக அன்வார் சூளுரைத்தார்.

ஜனநாயக முறைப்படி பொதுத் தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னதாகவே தம்மை பதவி விலகும்படி அறைக்கூவல் விடுப்பது, அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்று அன்வார் தெரிவித்தார்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, மாமன்னரின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு, அல்லது கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சியினர் முடிவு செய்து இருப்பார்களேயானால், அது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வர வேண்டும் என்பதே நடப்பு உண்மையாகும்.

பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதனைச் செய்ய முடியும் என்றால், அதனைத் தாராளமாகச் செய்யலாம் என்று அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

15 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடரின் முதலாவது அவை தொடங்கவிருக்கும் வேளையில் முடிந்தால் அப்படியொரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள் என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற பிரதமர் துறை பணியாளர்களின் மாதாந்திர பேரணியில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

வரும் 26 ஆம் தேதி சனிக்கிழமை, தம்மைப் பதவி இறங்கச் சொல்ல, பேரணி ஒன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக போலீசார் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

ஆனால், தம்முடைய ஒரே பதில் அந்தப் பேரணி தொடரட்டும், தடை ஏதும் இல்லை என்பதாகும் என்று அன்வார் விளக்கினார்.

Related News