மஇகா தேசிய துணைத் தலைவரும், முன்னாள் மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் எதிர்நோக்கும் 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கின் விசாரணை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் பேர் ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் விசாரணைக்காக மார்ச் 4ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல், மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல நாட்களை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.
அரசுத் தரப்பு 25 சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளது. தற்காப்புத் தரப்பு தனது வாத அறிக்கையை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, தம்மீதான மூன்று குற்றச்சாட்டுகளையும் சரவணன் மறுத்து விசாரணை கோரியிருந்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லஞ்சத் தொகையின் ஐந்து மடங்கு அல்லது 10 ஆயிரம் ரிங்கிட், இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாகவும் விதிக்கப்படலாம்.








