ரொம்பின், டிசம்பர்.27-
விரைவு பேருந்து ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.20 மணியளவில் ஜாலான் குவாந்தான் ஜோகூர் பாரு சாலையின் 159 ஆவது கிலோமீட்டரில் ரொம்பின், எண்டாவ் பாலத்தில் நிகழ்ந்தது.
அந்த விரைவு பேருந்து, ஜோகூர் பாருவிலிருந்து குவாந்தானை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் ஷாய் ஷாரிஃப் மொண்டோய் தெரிவித்தார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் அந்த விரைவு பேருந்து, பாலத்தின் மீது, எதிர்த்திசை வழித்தடத்தில் நுழைந்து, டிரெய்லர் லோரியுடன் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் 7 முதல் 50 க்கு உட்பட்ட வயதுடைய 30 பயணிகள் எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக அவர் மேலும் கூறினார்.








