Jan 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் பிரதமரின் பதவிக் காலம் இரண்டு தவணைகளாக வரையறுக்கப்படும்: பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியப் பிரதமரின் பதவிக் காலம் இரண்டு தவணைகளாக வரையறுக்கப்படும்: பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தகவல்

Share:

புத்ராஜெயா, ஜனவரி.05-

மலேசியப் பிரதமர் ஒருவர் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முழுத் தவணைகள் மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இதற்கான சட்ட மசோதா இந்த ஆண்டே நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு காலக்கெடு இருக்க வேண்டும். அதிகாரத்தை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதே சிறந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், ஒரு தனிநபர் நீண்ட காலம் அதிகாரத்தில் நீடிப்பதைத் தவிர்க்கவே இந்தச் சீர்திருத்தம் கொண்டு வரப்படுவதாக விளக்கமளித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர பேரணியில் ஆற்றிய 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு உரையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமரின் பதவிக் காலக் கட்டுப்பாடு மட்டுமின்றி, அரசுத் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதிகாரங்களைப் பிரித்தல் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவையும் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சட்டத் திருத்தம் மலேசியாவின் ஜனநாயகம் மற்றும் நிர்வாகத் தரம் ஆகியவற்றில் புதிய மைல்கல்லாக அமையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News