கோலாலம்பூர், அக்டோபர்.14-
அந்நியத் தொழிலாளர்களுக்கான மருத்துவச் சோதனைக்குப் பயன்படுத்துவதற்காக கடப்பிதழில் புகைப்படங்கள் மற்றும் இதர விவரங்களை மாற்றி, போலி ஆவணங்களைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.
மூன்று வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டது மூலம் இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூர், ஜாலான் ஜெலாவாட்டில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில் இந்த மோசடிக் கும்பலுக்குத் தலைமையேற்று இருந்த ஒரு வங்காளதேசப் பிரஜையான நயீம் என்று அடையாளம் கூறப்பட்ட நபர் உட்பட 25 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஸாகாரியா குறிப்பிட்டார்.
இந்தக் கும்பல் பிடிபட்டது மூலம் கட்டுமானத்துறை, விவசாயம் தொடர்புடைய வேலைக்கு அனுமதி அளிக்கும் போலி பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








